Wednesday, 4 June 2014

சுட்டது...!


என் காதலிக்கு சமர்ப்பணம்...!

மலர்ந்து சிரிக்கும் வெண் மதியே - என் 
மனதில் வசிக்கும் தேவதையே ! 
விண்ணைத் தாண்டி வருவாயா ? - நீ 
உன்னை ரசிக்கத் தருவாயா ? 

என்னில் எப்படியடி நீ வந்தாய் ? - என் 
கண்ணின் எதிரினில் வராமலேயே ? 
உன்னில் உருவான உன் குரலால் 
என்னில் இசையென நீ வடித்தாய்...! 

குரல் மட்டும் கேட்டுக் கேட்டு 
முகம் தெரியாமல் காதலித்தோம் 
முன் நின்று நாம் சந்திக்கையில் 
முழுதாக நம் இதயம் காண்போம்...! 

மெயிலில் உன் வாசகங்கள் 
மென்மலர் வாசங்கள் - அவை 
விழி வழியே தேன் ஊற்றும் 
விரிந்தே என் இதயம் அதைப் பருகும் ! 

கலைப் பொக்கிஷமே ! கவிதைக் காதலியே ! 
நிலை இழந்தேனடி ! நித்திரை தொலைத்தேனடி! 
உன்னை நினைத்தேனடி-உலகம் மறந்தேனடி-இது 
சதைக் காதலல்ல - சாகா வரம் பெற்றதடி ! 

சிரிப்பு மத்தாப்பே ! சிங்காரப் பேரழகே ! 
சிந்தனை கவர்ந்தவளே - எந்தனை உணர்ந்தவளே 
காதலெனும் கயிறாலே கட்டிப் போட்டாய் 
கவிஞனாய் என்னை நீ மாற்றிப் போட்டாய் ! 

கட்டழகு கண்ணெதிரில் இனி தோன்றிடினும் 
காமமில்லை கண்ணியமே நம் காதலுக்குள் ! 
உணர்வுகளாலே தொட்டுக் கொள்வோம் 
உண்மையாகவே உடல் சிலிர்த்துக் கொள்வோம் 

ஆயிரல் மைல்கள் தாண்டி 
ஆனந்த மயிலே நீ இருந்தாலும் 
ஆசையோடு என் நினைவு விரல் - நின் 
அதரம் பிதுக்கி அழகு பார்க்கும்.....! 

வெட்கம் உனது உடல் குத்தும் - காதல் 
வேதனை நமக்கு சுகமாகும் - நம் 
சுற்றமெல்லாம் மறந்தே போகும் - நம் 
சுந்தரக் காதலொன்றே வேதம் ஆகும் ! 

கட்டிப் பிடிக்காமலே உடல் வியர்க்கும் 
கால்கள் நில்லாமலே தடுமாறும் 
காதல் நினைவுகள் நம் நெஞ்சுக்குள் 
காற்றை மஞ்சமாக்கி உறங்காமல் வைக்கும் ! 

கட்டழகே நாமிருவரும் தொடவே வேண்டாமடி 
காலமெலாம் நிழல்கூட படவே வேண்டாமடி 
காதல் உணர்வே உள்ளுக்குள் இசை மீட்டும் 
காலமெல்லாம் மயிர்க் கால்கள் புல்லரிக்கும் ! 

இணைந்துவிடுவது மட்டும் காதல் வெற்றிஅல்ல 
இப்படி பிரிந்து நினைப்பதும் காதலில் வெற்றியே 
இனியவளே,இன்னமுதே,இதயமே-சரிதானே ? 
இன்னும் ஒன்னு தருகிறேனடி - உன் 
இதழில் ஈரம் பார்த்து உருகுகிறேனடி.....! 

உனக்கு தொண்ணூறு எனக்கு கூட ரெண்டு 
உண்மையாய் நமது வாழ்க்கைத் துணை 
உடலுக்காய் கட்டிக் கொண்ட துணைகள் அல்ல 
உத்தமமாய் தொடரும் புனர்ஜென்மக் காதலடி 

நினைவுகளால் புல்வெளி அமைத்து 
நீயும் நானும் நடந்து செல்வோம் கைகோர்த்து 
தோள்மேலே நீ சாய்ந்திருக்க - நின் 
தலை வருடி நெற்றியில் முத்தக் கவி எழுதி 

குளிர் அடிக்க கதகதப்பாய் 
இடை வரியில் விரல் வழுக்கியது 
இதழ் ஈரம் மது ரசமாய் 
இரு விழியில் எனை மயக்கியது 

ஐயோ காதலியே ! - எனது 
ஆனந்த சுவர்க்கமே...! 
அப்படியே உன்னை தலையில் வைத்து 
ஆடிக் கொண்டே இருக்க ஆசை பெருகுதடி ! 

பாட்டியாய் போய்விட்ட பத்தினிக் காதலியே-உன் 
பொக்கை வாய்க் குழியினுள் - இன்னும் 
போட்டு வைத்திருக்கிறேன் காதல் கவிதை 
முத்தத்தால் எடுக்கவா முழுமதியே அருகே வா 

நமது உடம்பில் ஏற்பட்ட சுருக்கங்கள் 
நம் காதல் நினைவு போட்டு விட்ட 
நறுமண மெகந்தி ஓவியங்கள் 
நரைகள் தடையல்ல ! காதல் நடையே அழகு ! 

முதுமையால் நடுங்குகிறது உதடுகள் ! 
முழு மூச்சை இழுத்து நச்சென்று ஒரு 
முத்தம் நினைவாலே கொடுக்கத் தோன்றுகிறது 
முத்தப் பொருள் மொத்தமாக அது இருக்க ! 

பொய்யான உடல் பொசுங்கிப் போகுமுன்னே 
மெய்யாக ஒரு முத்தம் உன் நெற்றியில் இட 
சுமங்கலியே உன்னை நெருங்குகையில் 
சுட்டெரிக்கப் பட்டே நான் கருக வேண்டும் 

முந்தி நானே சாக வேண்டும் - மீண்டும் 
முத்தமிழாய் பிறக்க வேண்டும் 
மெய் எழுத்தாய் கருவாவேன் - நீ 
உயிர் எழுத்தாய் எனக்குள் துடிப்பாகு 
உயிர் மெய்யாய் உரு எடுப்போம் 
உயர் தமிழாய் பிறந்திருப்போம் 
ஓர் உருவமாய் நாம் இருப்போம் 
உலகமெலாம் தமிழ் ஒலிக்க வைப்போம் 

கவிதையாய் வளர்வோமடி - 
காதலை நமக்குள் வைப்போமடி 
காலமெலாம் மகிழ்ந்து வாழ்வோமடி 
காதலியே கண்ணெதிரே வந்து விடடி ! 

மலர் இதழில் பனித் துளி ரசிப்போம் 
மனசுக்குள் புதுக் கவி படிப்போம் 
நினைவெனும் அணைப்புக்குள் 
நீயும் நானும் நமை மறப்போம் 

கை பேசியில் நீ அழைத்தால் - காதல் 
கதை பேச மனம் துடிக்கும் - காதலை 
கலை நயமாய் கட்டுப் படுத்தி - நல்ல 
கண்ணியத்தை நமக்குள் நிலை நிறுத்துவாய் 

உணர்ச்சியின் உச்சம் காதல் என்பேன் 
உண்மையில் புனிதம் நம் நட்பு என்பாய் 
காதலோ நட்போ நமக்கு நாமே சொந்தமடி 
கனவுலகே நமது வாழ்க்கையடி 

காதலே நமது ஸ்வாசமடி 
காதலே நமது ஸ்வாசமடி 
காதலே நமது ஸ்வாசமடி 



குறிப்பு : 

விண்ணைத் தாண்டி வருவாயா 
படத்தை பார்க்கச் சொல்லி வற்புறுத்தி 
தன் காதலை எனக்கு 
சொல்லாமல் சொன்ன 
அந்த வெண் நிலவுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்.......! 

No comments:

Post a Comment

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்! ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். ...